BGT 2024-25: முழு உடற்தகுதியை எட்டாத முகமது ஷமி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. மேலும் அவர் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்ற தகவல்களும் வெளியாகின. இந்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அளவில் முகமது ஷமியின் உடற்தகுதியில் இல்லை என பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தனது அறிக்கையில், “முகமது ஷமியை மருத்துவக் குழு முழுவதுமாக பரிசோதனை செய்தது. அதன் படி, அவர் முழு வீச்சில் பந்துவீசுவதற்கு அவரது முழங்காலுக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவது தெரிய வந்தது. அதன் காரணமாக, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவரால் விளையாட முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாமல் முகமது ஷமி அவதிப்பட்டு வந்தார். பின் காயத்திலிருந்து மீண்ட அவர், இந்தாண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் பெங்கால் அணிக்காக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த நிலையிலும், அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க முடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.