இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவானது கடந்த மாதம் மாற்றப்பட்டது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக இலங்கை தொடரின் போதே அவர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொந்த காரணங்களால் அவரால் அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியவில்லை.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மோர்னே மோர்கல் தனது பயிற்சி அளிக்கும் பணியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டபோது மோர்னே மோர்கல் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.