இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று 42ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகளை குவித்தனர். ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற ஒரே இந்தியக் கேப்டனாக தோனி இருக்கிறார். கீப்பர்- பேட்டர் என்பதை விடவும் அணியின் தலைவன் என்பதில் அனைவருக்கும் தோனி மீது தனிவிதமான அன்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக 5 முறை கோப்பையை வென்றுள்ளார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு தோனி எப்போதும் நெருக்கமான ஒரு கிரிக்கெட் வீரர். சமூக வலைதளங்கள், செல்பேசி போன்றவற்றில் இருந்து ஒதுங்கியே இருக்கும் தோனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். தோல்வியிலும் உடன் இருந்தது என்னுடைய நாய்கள்தான் என தோனி முன்னமே பல நேர்காணல்களில் கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியில், “வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பதற்கான சிறிய க்ளிம்ஸ் விடியோ இது” என்று பதிவிட்டுள்ளார். இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.