அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட தோனி; ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் - சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சரவெடியாக வெடிக்க, சிஎஸ்கே ரசிகர்களுக்கு வான வேடிக்கை தான். ருத்துராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், கான்வே 47 ரன்னும் எடுக்க, அடுத்து வந்த ஷிவம் துபே தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து மொயீன் அலி (19), பென் ஸ்டோக்ஸ் 8, ரவீந்திர ஜடேஜா 3 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பின் 19.2 ஆவது ஓவரில் களமிறங்கிய எம் எஸ் தோனி வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். இதையடுத்து 2ஆவது பந்திலேயும் சிக்ஸர் விளாசினார். 3ஆவது பந்திலேயும் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 12 ரன்களில் வெளியேறினார். எனினும், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 8ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 234 போட்டிகளில் விளையாடிய தோனி 4,978 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் சேர்க்க, 5,000 ரன்களை கடக்க 8 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், தான் சென்னையின் கோட்டையாக திகழும் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி கடைசியில் களமிறங்கி அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி 5,004 ரன்கள் எடுத்துள்ளார். தோனி சிக்ஸர் விளாசியதைக் கண்ட சக வீரர்கள் எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்களை கடந்த வீரர்கள்:
- விராட் கோலி - 224 போட்டிகள் - 6706 ரன்கள்
- ஷிகர் தவான் - 199 போட்டிகள் - 6086 ரன்கள்
- ரோகித் சர்மா - 221 போட்டிகள் - 5764 ரன்கள்
- டேவிட் வார்னர் - 155 போட்டிகள் - 5668 ரன்கள்
- சுரேஷ் ரெய்னா - 205 போட்டிகள் - 5528 ரன்கள்
- ஏபி டிவிலியர்ஸ் - 184 போட்டிகள் - 5162 ரன்கள்
- எம் எஸ் தோனி - 236 போட்டிகள் - 5004 ரன்கள்