நான் எப்போதுமே கிரிக்கெட்டில் பெரிய ஜாம்பவான் என்று நான் நினைத்ததில்லை - எம்எஸ் தோனி!

Updated: Thu, Dec 22 2022 10:40 IST
Ms Dhoni Doesn't Consider Himself 'A Legend'! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிடித்திருக்கிறார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனி பெற்றிருக்கிறார். மேலும் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தோனி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத விஷயங்கள் குறித்து ரசிகர்களிடையே உரையாற்றினார். அதில், பேசிய அவர், “என்னை யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொன்னால் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்பேன். ஏனென்றால் எனக்காக பல கோடி பேர் ஆதரவாகவும் பிரார்த்தனையும் செய்கிறார்கள். என் மீது அவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள்” என்று ரசிகர்களை நினைத்து தோனி உருக்கமாக பேசினார். 

இந்திய கிரிக்கெட் அணி குறித்து பேசிய தோனி, “நான் விளையாடும் காலத்தில் நாடு தான் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. என்னுடைய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் எப்போதுமே நினைப்பேன். வெற்றி வரும்போது நாம் விண்ணில் பறக்க கூடாது.

எப்படி அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கற்க வேண்டும். நான் எப்போதுமே கிரிக்கெட்டில் பெரிய ஜாம்பவான் என்று நான் நினைத்ததில்லை.எனக்கு எப்போதுமே மக்களிடம் தொடர்பு கொள்வது மிகவும் பிடிக்கும். இளம் வீரர்களுடன் நிறைய பேசுகிறேன். இந்திய கிரிக்கெட் உச்சத்தை தொட வேண்டும் என்பதற்காக இதனை நான் செய்கிறேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டே இரண்டு விலை மதிப்பு மிக்க சம்பவங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.ஒன்று 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் சமயத்தில் ரசிகர்கள் வந்தே மாதரம் என்ற பாடலை பாடியது. மற்றொன்று நாங்கள் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்று விட்டு மும்பையில் வரும்போது எங்களுக்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பு. இது இரண்டையும் நான் மறக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை