தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!

Updated: Sat, Apr 13 2024 20:24 IST
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் ’எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய தினம் மும்பை சென்றடைந்தது. இதையடுத்து சிஎஸ்கே அணி வீரர்கள் இன்று தங்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது மும்பை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அருங்காட்சியகத்தை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி பார்வையிட்டார். அப்போது, அவரது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை பார்வையிட்டுள்ளார். 

இந்நிலையில் இப்புகைப்படங்களை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படும் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளது. அவர் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற கேப்டன்களின் கீழ் இதுவரை இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை