களத்தில் கூலாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த எம் எஸ் தோனி!

Updated: Sat, Sep 24 2022 10:53 IST
MS Dhoni reveals how he controlled anger on field and became ‘captain cool’ (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில், அதற்கான காரணத்தை விவரித்துள்ளார் தோனி.

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் களத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எண்ணுவோம். அது மிஸ் ஃபீல்ட், கேட்ச் வாய்ப்பை நழுவ விடுவது அல்லது வேறேதேனும் தவறு போன்றவற்றை சொல்லலாம். அப்படியும் வீரர்கள் களத்தில் ஏதேனும் தவறு செய்யும்போது அங்கு கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை. மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் போட்டியை பார்த்து கொண்டிருக்கிறார்கள். 

டிவி போன்ற மீடியத்தின் வழியே கோடான கோடி பேரும் பார்த்து வருகின்றனர். நான் எப்போதும் அந்த வீரர் ஏன் தவறு செய்தார். அதற்கான காரணம் என்ன என்பதை அவரது கண்ணோட்டத்தில் நின்று பார்ப்பேன். அந்த வீரர் 100 சதவீதம் அந்த கேட்ச்சை பிடிக்க முயன்று, அதைத் தவறவிட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. 

அதே நேரத்தில் பயிற்சியின்போது அவர் எத்தனை கேட்ச் பிடித்தார் என்பதையும் கருத்தில் கொள்வேன். அவருக்கு அதில் ஏதேனும் சிக்கல் இருந்து, அதற்கு தீர்வு காண நினைதால் ஓகே. நான் எப்போதும் இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவேன். அந்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்த காரணத்தால் ஆட்டத்தை இழந்திருந்தாலும் நான் இதைத்தான் பார்ப்பேன்.

நானும் மனிதன்தான். உங்களுக்குள் இருக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் இருக்கிறது. நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம். அதனால், சில நேரங்களில் அந்தத் தவறுகள் மோசமானதாக இருக்கும். என்ன, அதை நான் வெளிக்காட்டாமல் இருப்பேன்.

வெளியில் உட்கார்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருக்க வேண்டும் என. விளையாட்டில் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். நாம் எப்படி நமது நாட்டுக்காக விளையாடுகிறோமா அதுபோல தான் எதிரணி வீரர்களும்” என தோனி தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை