டி20 உலகக்கோப்பை: ‘வாத்தி கம்மிங்’ இந்திய அணியின் ஆலோசகராக தோனி!
இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை். அதேசமயம் வாஷிங்டன் சுந்தருக்கும் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை. மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக இணைகிறார். பிசிசிஐ-யின் வாய்ப்பை தோனி ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், அவர் மீண்டும் தேசிய அணிக்கு பங்களிக்க ஆர்வமாக உள்ளார். மேலும் அவர் ரவி சாஸ்திரி மற்றும் பிற ஊழியர்களுடன் இணைந்து இந்திய அணிக்கு தனது ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
கடந்த 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.