பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு யசிர் கான் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யாசிர் கான் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கானும் அதிரடியாக விளையாடிய நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து அபார ஆட்டத்தி வெளிப்படுத்தி வந்த யசிர் கான் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 87 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய ஆஷ்டன் டர்னர், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களைச் சேர்க்க முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது நயீம் 11 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அப்துல்லா ஷஃபீக் 18, டேரில் மிட்செல் 19, ரிஷாத் ஹொசைன் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் சிக்கந்தர் ரஸா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் சாம் பில்லிங்ஸ் 43 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் உபைத் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.