தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை!

Updated: Wed, Mar 20 2024 21:26 IST
தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் இம்முறை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மும்பை அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியின் ஒரு அங்கமாக தில்ஷன் மதுஷங்கா விளையாடினார்.

இந்த சுற்றுப்பயணத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தில்ஷன் மதுஷங்கா காயமடைந்ததாக தகவல் வெளியானது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பந்துவீசிய தில்ஷன் மதுஷங்கா தனது இடது தொடைபகுதியில் காயமடைந்தார். இதையடுத்து அவர் களத்திலிருந்து வெளியேறி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்தது. 

இதனையடுத்து வங்கதேச தொடரிலிருந்து தில்ஷன் மதுஷங்கா விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது காயம் குணமடைய சிறிது காலம் தேவைப்படும் என்பதால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் தில்ஷன் மதுஷங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.4.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. 

இந்நிலையில் தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்று வீரராக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குவேனா மபகா மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் குவேனா மபகா அவரது அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு மும்பை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நடைபெற்று முடிந்த யு19 உலகக்கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் மபகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை