ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!

Updated: Fri, Dec 15 2023 21:58 IST
Image Source: Google

இந்தியாவில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் முறையில் மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள் என ஒட்டுமொத்த பட்டியலையும் கடந்த நவம்பர் 26ஆம் தேதியே வெளியிட்டது.

அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டிரேடிங் முறையில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை 15 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மீண்டும் தங்களது அணியில் இணைத்தது ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளையும் ஆட்டம் காண வைத்தது.

மேலும் இப்படி ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டதே அடுத்ததாக அவர் கேப்டனாக அறிவிக்கப்பட இருப்பதற்காகத்தான் என சில செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை நியமித்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இனி ஒரு சாதாரண வீரராகவே அந்த அணியில் விளையாட உள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணிக்காக அசாதாரணமான செயல்பாட்டை வழங்கிய கேப்டன் ரோஹித்தை பெருமைப்படுத்தும் விதமாக சில குறிப்புகளை அவர்கள் பதிவிட்டுள்ளனர். 

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், “ரோஹித் சர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக முதல்முறையாக பொறுப்பேற்றீர்கள். அப்போது வெற்றியை இலக்காக கொண்டு செயல்படுவோம் என்று நம்பிக்கையுடன் சொன்னீர்கள். அதுமட்டும் இன்றி வெற்றி தோல்வி என எது வந்தாலும் சிரிக்க சொல்லி எங்களிடம் கேட்டுக் கொண்டீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் வெற்றிப்பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. எப்பொழுதுமே நீங்கள் எங்களுடைய கேப்டன் தான். நன்றி கேப்டன் ரோஹித்” என அவர்கள் உருக்கமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை