ஐபிஎல் 2024: நாடு திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மான்; கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!

Updated: Wed, Apr 03 2024 16:05 IST
ஐபிஎல் 2024: நாடு திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மான்; கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 15 லீக் போட்டிகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு எதிரணியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு சீசனில் இதுவரை தோல்வியையே சந்திகாத அணிகளாக வலம்வருகின்றனர்.

அதேவகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் பொருந்திய அணியாக பார்க்கப்பட்டுவரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு சீசனில் இதுவரை ஒருவெற்றியைக் கூட பதிவுசெய்ய முடியாமல் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை குவித்துள்ளது. 

அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு சருக்கியுள்ளது. இருப்பினும் இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

அந்தவகையில் சிஎஸ்கே அணியானது தனது நான்காவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இடம்பெறமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஏனெனில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்கதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின் அவர் மீண்டும் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இடம்பெறாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடிய மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுடன், பர்பிள் தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை