நான் இதை கூறியதும் எனது தந்தை மகிழ்ச்சியில் அழுதே விட்டார் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Updated: Sat, Jun 24 2023 17:29 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் அங்கு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 வயதான இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தது மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறி உள்ளதாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “21 வருடமாக நான் கண்ட ஒரே கனவு இது மட்டும் தான். ஒவ்வொரு நாள் இரவிலும் நான் உறங்கும் போதும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து சதம் விளாசி ரசிகர்கள் கொண்டாடுவது போன்ற கனவு கண்டிருக்கிறேன். தற்போது அதை நினைவாக்கும் வகையில் இந்திய அணியில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

என்னுடைய திறனை மைதானத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். ஐபிஎல் தொடர் முடிந்து தற்போது தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். என்னுடைய இந்த வாய்ப்பினை நான் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று உறுதியாக நம்புகிறேன். அதோடு இந்திய அணியில் இருந்து எனக்கு வந்த இந்த அறிமுக வாய்ப்பு குறித்து எனது தந்தையிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சியில் அழுதே விட்டார்.

நான் எனது அம்மாவை இன்னும் பார்க்கவில்லை. நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக என் அம்மாவை பார்க்கச் செல்வேன். மேலும் எதிர்வரும் இந்த தொடருக்காக நான் தற்போதும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை