உலகக்கோப்பையில் விளையாடுவதே குறிக்கோள் - ஷிகர் தவான்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் களமிறங்குகிறார். டெஸ்ட், டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டும் அவ்வப்போது வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்தும், டி20 அணியில் ஷிகர் தவான் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்து தொடரில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தவான் தள்ளப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இஷான் கிஷன், ருத்துராஜ், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரராக வாய்ப்புக்காக காத்துள்ளனர். இதனால் இங்கிலாந்து தொடரில் ஒரு சதமாவது அடித்து தனது இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஷிகர் தவான் உள்ளார்.
போட்டி குறித்து பேசிய தவான், “இங்கிலாந்து தொடர் எனக்கு எவ்வளவு முக்கியம் என தெரியும்.அதற்காக சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டேன். என்னுடைய அடிப்படையிலும் பயிற்சி முறையிலும் கவனம் செலுத்தினேன். ஆனால் போட்டியின் போது நன்றாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். இந்தியாவுக்காக எவ்வளவு முடியுமோ, அத்தனை போட்டியில் விளையாட ஆசைப்படுகிறேன்.
இதற்காக ஐபிஎல் மறறும் உள்ளூர் ஒருநாள் போட்டியில் விளையாடி தயாராகி வருகிறேன். முதலில் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. எனது பேட்டிங் முறை மீது நம்பிக்கை உள்ளது. ஒரு தொடக்க வீரருக்கு இது தான் முக்கியம். மனதை அமைதியாக வைத்து கொண்டு அணியின் ஸ்கோரை கட்டமைக்க வேண்டும். முதலில் 20, 30 ரன்களை அடித்துவிட்டு, பின்னர் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும்.
உடல் தகுதி முக்கியம் என்பதால் தற்போது மாவுச்சத்துள்ள உணவை இரவில் அதிகம் சாப்பிடுவதில்லை. கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது, திரும்பவும் கிரிக்கெட்டுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக பயிற்சி அகாடமியை தொடங்கி உள்ளேன். நான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன். எனது கனவை நினைவாக்க கடுமையாக உழைத்தேன். என் குழந்தைகளுக்கும் அதை தான் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.