சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நமீபிய வீரர்; 33 பந்துகளில் சதமடித்து அசத்தல்!
நேபாளில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரில் நேபாள், நமீபியா மற்றும் நேதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நேபாள் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லின்கென் - மாலன் குருகர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
பின்னர் மைக்கேல் வான் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோட்ஸி 11 ரன்களிலும், ஜான் ஃபிரைலிங் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் குருகருடன் இணைந்த நிகோல் லோஃப்டி-ஈடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களும் விளாசினார். இதில் க்ரூகர் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தியது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட நிகோல் லோஃப்டி ஈடன் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 101 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியில் குஷால் புர்டல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் - குசால் மல்லா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஹித் படேல் 42 ரன்களுக்கும், குசால் மல்லா 32 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய திபெந்திர சிங்கும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நெபாள் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நமீபியா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து மிரட்டிய நிகோல் லோஃப்டி ஈடன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்து அசத்திய நேபாள் வீரர் குசால் மல்லாவின் சாதனையை முறியடித்து புது சாதனை படைத்துள்ள நிகோல் லோஃப்டி ஈடனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்
வீரர் | அணி | எதிரணி | ஆண்டு | பந்துகள் |
நிகோல் லோஃப்டி-ஈடன் | நமீபியா | நேபாளம் | 2024 | 33 பந்துகள் |
குஷால் மல்லா | நேபாளம் | நமீபியா | 2023 | 34 பந்துகள் |
டேவிட் மில்லர் | தென் ஆப்பிரிக்கா | வங்கதேசம் | 2017 | 35 பந்துகள் |
ரோஹித் சர்மா | இந்தியா | இலங்கை | 2017 | 35 பந்துகள் |
சுதேஷ் விக்கிரமசேகர | செக் குடியரசு | துருக்கி | 2019 | 35 பந்துகள் |