ரூட் மட்டும் விளையாடினால் தொடரை வெல்ல முடியாது -நாசர் ஹுசைன்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 60 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான தோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணி பெற்ற இந்த மோசமான தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியில் குறிப்பிட்ட மூன்று வீரர்களைத் தவிர வேறு எந்த வீரரும் சரியாக விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த தோல்வி குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் “இங்கிலாந்து அணியானது லார்ட்ஸ் மைதானத்தில் நிறைய அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அதை யாரும் மறந்து விடக் கூடாது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரிஷப் பந்த் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியை இங்கிலாந்து நிச்சயம் எளிதாக வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெறும் என்று நாம் அனைவரும் நினைத்தோம்.
ஆனால் இந்திய அணி மீண்டும் அதிலிருந்து போராடி தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்திய அணியிலும் பேட்டிங் குறைபாடு உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே பேட்டிங்கில் நம்பியுள்ளது. ரூட் மட்டும் ஒருபுறம் ஆடிவருகிறார். அவரை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிப்பவதில்லை.
அவர் மட்டுமே அடிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தால் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.