நடுவரின் கவனக்குறைவு; ஓவரின் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட சம்பவம்!

Updated: Fri, Nov 04 2022 19:20 IST
Image Source: Google

எட்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப் ஒன்றில் நடைபெற்ற மிக முக்கியமான சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆஃப்கானிஸ்தான் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

மிட்சேல் மார்ஷ்- மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 164 ரன்கள் அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் போது, ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் வீசிய 4ஆவது ஓவரில், 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஓவரை மார்ஷ் மற்றும் வார்னர் எதிர்கொண்டனர்.

முதல் பந்தில் மார்ஷ் 1 ரன் எடுக்க, 2ஆவது பந்தில் வார்னர் ஒரு ரன் எடுத்தார். 3ஆவது பந்தை மார்ஷ் பவுண்டரிக்கு விரட்ட, 4ஆவது பந்தில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை வார்னர் டாட் செய்தார். 6ஆவது பந்து வீசப்படவில்லை. நடுவர்களின் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளது.

இதனால் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மோசமான நடுவர் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாளை இங்கிலாந்து அணியும் இலங்கையை வீழ்த்தினால் இரு அணிகளின் புள்ளியும் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

அப்போது ஒருவேளை சிறிய ரன் ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றால், ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பில் இந்த ஒரு பந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை