மீண்டும் வலுவாக திரும்புவோம் - கேஎல் ராகுல்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணியானது 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியை ஆவது பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன்கள் குவிக்க அடுத்ததாக இந்திய அணி 283 ரன்கள் மட்டுமே குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் இந்த தொடரினை தவற விட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று போட்டிகளிலுமே அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளதால் பெரிய விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராகுல், “தீபக் சாகர் உண்மையிலேயே எங்களுக்கு வெற்றி பெறுவதற்கான சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது மிகவும் வருத்தமான ஒன்று. நாங்கள் இந்த போட்டியில் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டு உள்ளோம். இதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. அதேபோன்று மேம்படுத்த வேண்டிய விசயங்களும் உள்ளது.
நிச்சயம் எங்களது ஷாட் செலக்சன் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எல்லா பந்துகளையும் சரியான திசைகளில் தொடர்ச்சியாக அடித்திருந்தால் விக்கெட்டுகள் விடாமல் ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் மீண்டும் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள சில சில சறுக்கல்களே தொடர் தோல்விக்கு காரணமாக. இருப்பினும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம் என்று நினைக்கிறேன்.
எங்கள் அணியில் சில புது வீரர்களும் இருக்கின்றனர். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி எங்களது பயணத்தின் தொடக்கம் தான். உலக கோப்பை எதிர் வரும் இவ்வேளையில் நிச்சயம் அணியை மீண்டும் வலுவானதாக மாற்றுவோம்” என்று தெரிவித்தார்.