வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்துள்ளோம் - கேஎல் ராகுல்!

Updated: Sun, Dec 18 2022 21:04 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் சாட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது டிக்ளேர் செய்வதாக அறிவித்து, வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் சுப்மன் கில ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.

இதனையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஜாஹிர் ஹசன் 100 ரன்களும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 84 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 324 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்தநிலையில், வங்கதேச அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான கேஎல் ராகுல், வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கேஎல் ராகுல், “வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாங்கள் சில தவறுகளை செய்துவிட்டோம், இதன் காரணமாக தொடரையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு எங்களை தயார்படுத்தி கொண்டோம். இந்த வெற்றிக்காக நாங்கள் மிக கடுமையாக உழைத்துள்ளோம். இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தனர். ஆடுகளத்திற்கு ஏற்றவாறு எங்கள் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். 

சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், புஜாரா, ரிஷப் பந்த் என அனைவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தனர். பந்துவீச்சிலும் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டோம். இரண்டு இன்னிங்ஸிலும் நாங்கள் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இல்லாத போதிலும், எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தங்களால் என்ன முடியும் என்பதை இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் நிரூபித்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை