புதிய தேசிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவை பாராட்டிய அனுராக் தாக்கூர், கவுதம் கம்பீர்!
ஃபின்லாந்து நாட்டின் துருக்கு நகரில் சர்வதேச பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையை படைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சர்வதேச போட்டியில் 88.07 மீட்டரும், அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 87.58 மீட்டரும் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்திருந்தார்.
இதில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில், தற்போது பாவோ நூர்மி போட்டியில் அவர் 89.30 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததால் தனது முந்தைய இரண்டு சாதனைகளையுமே நீரஜ் சோப்ரா முறியடித்திருக்கிறார். இதில் இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
முதலிடத்தை ஃபின்லாந்தின் ஆலிவர் ஹிலேண்டர் கைப்பற்றியிருக்கிறார். அவர் 89.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். மூன்றாம் இடத்தை பிடித்த கிரேனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டரஸ், 86.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன்ஷிப் போட்டி தயாராகி வரும் நீரஜ் சோப்ராவுக்கு இந்த வெற்றி புதிய உத்வேகத்தை கொடுக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 90மீ தூரம் எறிவதை இலக்காக கொண்டு நீரஜ் சோப்ரா பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடித்த நீரஜ் சோப்ராவை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “தங்க நாயகன் மீண்டும் செய்தான்! புதிய தேசிய சாதனை. நன்றாக செல்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அவர் ஈட்டி எறியும் காணொளியை இணைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.