சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் சந்தீப் லாமிச்சானே. இவர் நேபாள் கிரிக்கெட் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது 23 வயதான சந்தீப் லாமிச்சானே, கிரிக்கெட்டில் பெரிய உயரத்தை தொட்டு, நேபாளத்துக்கு பெருமை சேர்த்து தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச காவல்துறை (இண்டர்போல்), அவரை தேடும் அளவுக்கு குற்றவாளியாக மாறிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணம் 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகார் தான்.
கடந்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தீப் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து சந்திப் லமிச்சானேவுக்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் சந்தீப் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றார்.
நேபாளம் திரும்பினால் தாம் கைது செய்யப்படும் என்பதை அறிந்த சந்தீப், வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த வழக்கு நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் அழுத்தங்களும் ஏற்பட்டது. இதையடுத்து நேபாள கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனையடுத்து சந்தீப்பை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச காவல்துறைக்கு நேபாள நாட்டு காவல்துறை கோரிக்கை விடுத்தது.
அதன்பின் கடந்த வாரம் சந்தீப்பை தேடப்படும் குற்றவாளி என சர்வதேச காவல்துறையினர் அறிவித்தனர். இந்நிலையில், சந்தீப் லமிச்சானே முகநுலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 6ஆம் தேதி நேபாளத்துக்கு திரும்பி காவல்துறையிடம் சரணடைய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பொய்யானது என்றும், நீதி மேல் நம்பிக்கை உள்ளது. நான் வழக்கில் குற்றமற்றவன் என நிரூபிபேன் என்று சந்தீப் லமிச்சானே குறிப்பிட்டுள்ளார்.