பிபிஎல் 12: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்!

Updated: Thu, Feb 02 2023 18:46 IST
Image Source: Google

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குவாலிஃபயர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு இறுதிப்போட்டியாளரைத் தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி இன்று நடந்தது. இதில் சிட்னி சிக்ஸர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் யாரையும் நிலைத்து நின்று அடித்து ஆட பிரிஸ்பேன் ஹீட் அணி பவுலர்கள் அனுமதிக்கவில்லை. சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் 19 ரன்னிலும், ஜோஷ் ஃபிலிப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேனியல் ஹியூக்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

ஜோர்டான் சில்க் 10 ரன்னும் ஹைடன் கெர் 16 ரன்னும் மட்டுமே அடித்தனர்.  பிரிஸ்பேன் ஹீட் அணியின் பவுலிங்கை திறம்பட அடித்து ஆடமுடியாமல் 20 ஓவரில் 116 ரன்கள் மட்டுமே அடித்தது. பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் குன்னெமேன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா   3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 117 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணி 56 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் பின்வரிசையில் இறங்கிய மைக்கேல் நெசெர் அதிரடியாக ஆடி 32 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களை விளாசி போட்டியை முடித்து கொடுத்தார். 

அவரது அதிரடியால் 19ஆவது ஓவரிலே பிரிஸ்பேன் ஹீட் அணி இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. பிப்ரவரி 4ஆம் தேதி பெர்த்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும்  பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை