முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நெதர்லாந்து, நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நேபாளில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி கீர்த்திபூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டெல் - ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் குஷால் புர்டெல் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் படெலும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய குல்சன் ஜாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் ஷேக் 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழ்கக, குல்சன் ஜாவும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களில் குஷால் மல்லா மட்டும் 26 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் ஃபிரெட் கிளாசன், வாண்டெர், மைக்கேல் லெவிட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மைக்கெல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மேக்ஸ் ஓடவுட் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த மைக்கேல் லெவிட்டும் 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த விக்ரம்ஜித் சிங் - சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில், விக்ரம்ஜித் சிங் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 2 ரன்களுக்கும், தேஜா நிடமனுரு 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏங்கல்பிரெக்டும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிம் வேண்டர் 5 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய மைக்கேல் லெவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.