ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பென் டக்கெட் 92 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 96 ரன்னிலும், ஹாரி புரூக் 55 ரன்களுடனும் விக்கெட்டை இழக்க, ஜோ ரூட் 73 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதனையடுத்து 533 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தினார். அதன்படி இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்தின் நாதன் ஸ்மித், மேட் ஹென்றி மற்றும் டிம் சௌதீ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியதுடன், வெல்லிங்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையையும் தனதாக்கியுள்ளர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கஸ் அட்கின்சன், “இன்றைய தினம் எங்கள் திட்டங்கள் நன்றாக வேலை செய்தது. மேலும் எங்கள் பேட்டர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். இப்போட்டியின் நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை. ஆனால் அதனைச் செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் நாங்கள் பேட்டர்களுக்கு ஷாட் பந்துகளை வீசி அதன்பின் யார்க்கர் வீச விரும்பினோம். நேற்று எனது பந்துவீச்சு சிறப்பக இல்லை என்றாலும், இன்று நான் நன்றாக உணர்ந்தேன்” என்று கூறினார்.