முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திராவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 3ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 58 ரன்களைச் சேர்த்த கையோடு கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் லேதமும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதையடுத்து மிட்செலுடன் இணைந்த கிளென் பிலிப்புஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெலும் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விலையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய காம்ரன் குலாம் 18 ரன்களிலும், கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சல்மான் அகா மற்றும் தயாப் தாஹிர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர். பின் தயாப் தஹிர் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சல்மான் ஆகாவும் 40 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய குஷ்தில் ஷா 15, ஷாஹீன் அஃப்ரிடி 10, நசீம் ஷா 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இறுதிவரை களத்தில் இருந்த அப்ரார் அஹ்மத் 23 ரன்களைச் சேர்த்தார். இதனால் பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் கேப்டன் மிட்செல் சன்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலீப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.