நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இந்த டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று (மார்ச் 23)  மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்காம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர்.

Advertisement

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய டிம் செஃப்ர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், மற்றும் மிட்செல் ஹெய் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் மைக்கேல் பிரேச்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரில் மிட்செல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய முகமது ஹாரிஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஹசன் நவாஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் சல்மான் ஆகா, சதாப் கான் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும், குஷ்தில் ஷா 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த இர்ஃபான் கான் மற்றும் அப்துல் சமத் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடிய இர்ஃபான் கான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களுக்கும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அப்துல் சமாத் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களால் நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தானர். இதனால் பாகிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News