அரையிறுதி வாய்ப்பை இழக்கும் இந்தியா; விளாசும் முன்னாள் வீரர்கள்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. எதிரணிக்கு கொஞ்சம் கூட நெருக்கடி கொடுக்காமல் நமது அணி முழுமையாக அடி பணிந்ததை பார்த்து ரசிகர்கள் உடைந்து போயினர்.
நேற்று துபாயில் நடந்த வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. இந்த தொடரில் உண்மையான ஹிரோ டாஸ் என்பதால் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் உற்சாகமாக முதலில் பந்துவீசுகிறோம் என்று கூறினார். அதே போல் நியூசிலாந்து பவுலர்கள் உற்சாகமாக பந்துவீச இந்திய வீரர்கள் விக்கெட்டுக்கும், பெவிலியனுக்கும் அணிவகுப்பு நடத்தினார்கள்.
கிட்டத்தட்ட நியூசிலாந்து வீரர்களுக்கு கேட்ச் பயிற்சி கொடுப்பதுபோல் பந்தை அவர்களின் கையில் தூக்கி கொடுத்து வரிசையாக நடையை கட்டினார்கள். மிக மோசமாக 20 ஓவர்களில் 110 ரன்களே இந்தியா எடுத்தது. பேட்டின்ங்கில் சொதப்பினாலும் பவுலிங்கிலாவது நெருக்கடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் ஏதோ வேண்டா வெறுப்பாக பந்து வீசினார்கள்.
முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்து இந்தியாவின் அரையிறுதி கனவுக்கு வேட்டு வைத்து விட்டது. பாகிஸ்தானிடம் செய்ததை போல் நியூசிலாந்திடமும் இந்தியா போராடாமல் பணிந்ததால் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றுள்ளனர்.
நேற்று இந்திய அணி செய்த தேவையில்லாத மாற்றங்களே தோல்விக்கு முழு முதற்காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது வழக்கமாக ஓப்பனிங் இறங்கும் ரோகித், ராகுலுக்கு பதிலாக ராகுல், இஷான் கிஷன் இறங்கினார்கள். டிரெண்ட் பவுல்ட் இன்சுவிங் வீசுவார் என்பதால் அதை தவிர்க்கும் வகையிலே ரோகித் ஒன்டவுன் இறங்கியதாக கூறப்படுகிறது.
அவரை வழக்கமான இடத்திலேயே ஓப்பனிங்கில் விளையாட வைத்திருந்தால் ஓரளவு ரன்கள் சேர்த்திருப்பார். இதுவே முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அணியை ஆட்டம் காண வைத்து விட்டது. இந்த நிலையில் இந்திய அணித் தேர்வில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், '' எந்தவொரு பெரிய போட்டியிலும் அணியின் பிளெயிங் லெவனை, வீரர்களின் இடத்தை ஒரே ஒரு ஆட்டத்தில் மாற்றி, விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது. வீரர்களுக்கு தன்னம்பிக்கை தேவை. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இப்படி ஒரு மாற்றம் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.