ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!

Updated: Sat, Jul 01 2023 13:35 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மெலி கெர், கேப்டன் சோஃபி டிவைன் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 137 ரன்களையும், மெலி கெர் 108 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் கவிஷா தில்ஹாரியை தவிர ம்ற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன் செய்துள்ளது.   

இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். வழக்கமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் 10 ஓவர்களை மட்டுமே வீச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக நியூசிலாந்து வீராங்கனை 11 ஓவர்களை வீசியிருந்தார் .

அதுமட்டுமில்லாம இதனை போட்டி நடுவர்களும் தவறவிட்டுள்ளனர். இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளில் நடுவர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், ஐசிசியால் நடத்தப்படும் சாம்பியன்ஷிப் தொடரில் இப்படிப்பட்ட தவறை நடுவர்கள் செய்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை