ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி வீரர் ஃபின் ஆலன் விலகல்!
Zimbabwe T20I Tri Series: ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஜூலை 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் பென் சீயர்ஸ், லோக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை.
மேற்கொண்டு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியில் டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்திருந்தனர். இந்நிலையில் தற்சமயம் நியூசிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலான் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஃபின் ஆலன் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்காக இதுவரை 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபின் ஆலன் 2 சதம், 5 அரைசதங்கள் என மொத்தமாக 1285 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் நடைபெற்று வரும் எம்எல்சி தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 9 போட்டிகளில் 333 ரன்களையும் குவித்திருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் முத்தரப்பு தொடரில் இருந்து ஃபின் ஆலன் விலகி இருப்பது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஃபின் ஆலானுக்கு பதிலான மாற்று வீரரையும் நியூசிலாந்து அணி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள அறிமுக வீரர் பெவான் ஜேக்கப்ஸ் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி