NZ vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற, இரண்டாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் நுவனிந்து ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், சரித் அசலங்கா, தனஞ்செய டி சில்வா என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் ஷனகா 31 ரன்களையும், கருணரத்னே 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஷிப்லி, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் சாத் பௌஸ், டாம் பிளெண்டல், டேரில் மிட்செல், டாம் லேதம் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வில் யங் - ஹென்றி நிக்கோலஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 86 ரன்களைச் சேர்த்தனர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதேசமயம் இலங்கை அணி இத்தோல்வியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிப்பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.