நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை - மிட்செல் சாண்ட்னர்!

Updated: Tue, Oct 10 2023 12:14 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் மிச்சல் சான்ட்நர் பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்களும், பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் உலககோப்பை போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய மிட்செல் சாண்ட்னர், “இந்த போட்டி எங்களுக்கு மோசமாக அமையவில்லை. காரணம் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

ஆடுகளத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. எனினும் நாங்கள் 320 ரன்கள் மேல் அடித்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். மாலை நேரத்தில் பந்து வீசும் போது ஆடுகளம் நன்றாக செயல்பட்டது. இதன் மூலம் நாங்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெதர்லாந்து வீரர்களை கட்டுப்படுத்தினோம். மொத்தத்தில் இது ஒரு நல்ல போட்டியாக அமைந்தது.

இன்றைய நாளில் நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால் விக்கெட்டுகள் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே. பந்து வீசும் போது எங்களுக்குள் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டு நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை பெற்றோம். இங்கிலாந்து அணியை நாங்கள் எதிர்கொள்ளும்போது எவ்வாறு விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களின் ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தோமோ அதே போல் தான் இன்றும் செயல்பட்டோம்.

இன்றைய ஆடுகளம் மிகவும் குறைவாக இருந்ததால் சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். இதுபோன்ற ஆடுகளத்தில் நான் கடந்த 10 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் பார்த்திருக்கிறேன். ஜடேஜா இதுபோன்ற ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீசுவார் என்று நான் உற்றுநோக்கி கவனத்து இருக்கிறேன். அதைத்தான் நானும் தற்போது செய்து இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை