பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்

Updated: Sun, May 16 2021 12:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடர் குறித்து தான் தற்போது சர்வதேச அளவில் பேச்சுக்கள் உலா வருகிறது.

உலகில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் என பல நாடுகளும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடத்தினாலும் இந்தியாவின் ஐபிஎல் தொடர், பிரபலத்திலும், பணம் புழக்கத்தில் டாப்பில் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ஒன்று தான், ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் உள்ள ஒன்று ஐபிஎல்-ல் இல்லை என வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,“பல்வேறு நாடுகளில் இருந்தும் உலகின் தலைசிறந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர். அது வேற லெவல் போட்டி தான். ஐபிஎல் தொடரை நடத்தும் விதம், வீரர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை முற்றிலும் மாறுபட்டது. அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆனால் ஐபிஎல்-க்கு அடுத்தபடியாக சிறந்த கிரிக்கெட் தொடர் என்றால் அது பிஎஸ்எல் மட்டும் தான். அது நிருபனம் ஆகியுள்ளது.

எனினும் பந்துவீச்சு தரத்தை பார்த்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் உலகின் சிறந்த தொடராகும். பிஎஸ்எல் தொடரில் இருப்பது போன்ற பவுலர்கள் உலகில் வேறு எந்த தொடரிலும் இருக்கமாட்டார்கள். ஐபிஎல் தொடரில் கூட இருக்காது. அதனால் தான் பிஎஸ்எல் தொடரில் பெரிய அளவில் எந்த போட்டியும் பெரிய இலக்கை கொண்ட போட்டியாக இருக்காது. இந்த தொடரில் இருக்கும் பந்துவீச்சுகள் உலகில் சிறந்த ஒன்று” என தெரிவித்துள்ளார்.

35 வயதாகும் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை விளையாடி வருகிறார். அந்த தொடரில் இதுவரை அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையும் இவரையே சார்ந்துள்ளது. இவர் இந்தியாவின் ஐபிஎல் தொடர் குறித்து புகழ்ந்து இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை