அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்லை அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய நூர் அஹ்மத் - வைரல் காணொளி!

Updated: Sun, Jun 23 2024 10:44 IST
அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்லை அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய நூர் அஹ்மத் - வைரல் காணொளி! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், இப்ராஹிம் ஸத்ரான் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஆஸ்திரேலிய அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு உதவிய குல்பதீன் நைப் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி நகர்ந்த நிலையில் குல்பதீன் நைப் பந்துவீச்சில் நூர் அஹ்மத் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று தான் இப்போட்டியின் முடிவை முற்றிலுமாக மாற்றியது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அதன்படி அரைசதம் கடந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக போராடி வந்த கிளென் மேக்ஸ்வெல் 59 ரன்களைச் சேர்த்த நிலையில் குல்பதின் நைப் பந்துவீச்சில் பாய்ண்ட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சிக்க, அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த நூர் அஹ்மத் டைவ் அடித்து அபாரமான கேட்சைப் பிடித்து அசத்தினார். அந்த ஒரு கேட்ச் தான் இன்றைய போட்டியின் முடிவை மாற்றியது. இந்நிலையில் நூர் அஹ்மத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை