நான் வக்கார் யூனிஸை பின்பற்ற வில்லை - பிரெட் லீக்கு உம்ரான் மாலிக் பதிலடி கருத்து!

Updated: Mon, Jun 06 2022 17:17 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான சீசனாக அமைந்தது.  உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சென், சிமர்ஜீத் சிங், அர்ஷ்தீப் சிங் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அருமையாக பந்துவீசி எதிரணி வீரர்களை தெறிக்கவிட்டனர்.

இவர்களில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி அசத்தினார். 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய உம்ரான் மாலிக், இந்த சீசனின் 2வது அதிவேக பந்தை வீசினார். 157 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்துதான் ஃபைனலுக்கு முன் வரை அதிவேக பந்தாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் ஒருபந்தை வீசி அவரை முந்தினார் ஃபெர்குசன்.  

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய 14 லீக் போட்டிகளிலும் அதிவேக பந்தை உம்ரான் மாலிக்கே வீசியிருந்தார். 150 கிமீ வேகத்திற்கு  மேல் அசால்ட்டாக வீசும் உம்ரான் மாலிக், தனது அதிவேகமான பந்துவீச்சால் எதிரணி வீரர்களை அலறவிட்டார். இந்தசீசனில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்ததுடன், ஐபிஎல் 15வது சீசனின் முடிவில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் பெற்றார்.

முன்னாள் வீரர்கள் பலரை கவர்ந்துள்ள உம்ரான் மாலிக், ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் பிரெட் லீயையும் கவர்ந்தார். உம்ரான் மாலிக் குறித்து பேசிய பிரெட் லீ, “உம்ரான் மாலிக்கின் பெரிய ரசிகன் நான். மிரட்டலான வேகத்தில் வீசுகிறார். கடந்த காலங்களில் ஆடிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை போல உள்ளது, உம்ரான் மாலிக்கின் ரன்னப். உம்ரானை பார்க்கும்போது வக்கார் யூனிஸ்தான் என் நினைவுக்கு வருகிறார்” என்று பிரெட் லீ கூறினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள உம்ரான் மாலிக், பிரெட் லீ கூறிய கருத்து குறித்து பேசியிருக்கிறார். 

இதுகுறித்து பேசிய உம்ரான் மாலிக், “நான் வக்கார் யூனிஸை பின்பற்றியதே இல்லை. எனது இயல்பான பவுலிங் ஆக்‌ஷனில் தான் பந்துவீசுகிறேன். நான் எனது ரோல் மாடல்-களாக பார்ப்பது, பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரைத்தான். அவர்களைத்தான் பின்பற்றுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை