நாங்கள் செய்த சில தவறுகளால் எங்களால் இலக்கை எட்டமுடியவில்லை - கேஎல் ராகுல்!

Updated: Sun, Mar 24 2024 22:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியின் இறுதி வரை போராடிய நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களைச் சேர்த்திருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன்  சஞ்சு சாம்சன் பெற்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இது தொடரின் முதல் போட்டி என்பதால் இதற்காக நாங்கள் பெரிதளவில் எந்த திட்டத்தையும் தயார்செய்யவில்லை. பவர்பிளேவின் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது, ஆனால் எந்த அணியும் இதுவரை அதை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். மெஹ்சின் கான் எங்களது முதல் சீசனில் அணியின் பவர்பிளே பந்துவீச்சாளராக இருந்தார். 

ஆனால் காயம் காரணமாக கடந்த சீசனில் அவர் விளையாடவில்லை. தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ள அவரை திரும்பி பார்த்ததில் மகிழ்ச்சி. மேலும் நவீன் உல் ஹக்கும் எங்கள் அணியின் முக்கியமான வீரராக இருந்துவருகிறார். இன்றைய போட்டியில் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒன்றும் பெரியதல்ல. ஆனால் நாங்கள் செய்த சில தவறுகளால் எங்களால் இன்று அதனை செய்ய முடியவில்லை. இருப்பினும் அந்த தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம்.

நாங்கள் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், எங்களால் 194 என்ற இலக்கை எட்டமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் எங்களுக்கான வாய்ப்பு இருந்தும் நாங்கள் அதனை தவறவிட்டுள்ளோம். ஆனால் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் இங்கிருந்து உருவாக்க முயற்சிப்போம், மேலும் நாங்கள் எங்கு தவறுகளை செய்துள்ளோம் என்பதைப் பார்த்து அதனை திருத்திக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை