மோர்கனும் தோனியைப் போன்றவர் - மொயீன் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஈயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மோசமான ஃபார்ம் மற்றும் காயங்கள் காரணமாக அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், மோர்கன் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி போலவே ஈயன் மோர்கனும் அணியில் உள்ள தனது வீரர்களை நம்பி அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பையும் கொடுத்து வளர்க்கும் அற்புதமான கேப்டன் என்று அந்த இருவரின் தலைமையிலும் விளையாடிய இங்கிலாந்து வீரர் மொயீன் அலி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடிய அவர் இதுபற்றி சமீபத்திய பேட்டியில் பேசுகையில், “நான் மோர்கன் தலைமையில் விளையாடியுள்ளேன். அதேசமயம் எம்எஸ் தோனியின் தலைமையிலும் விளையாடியுள்ளேன். அவர்களின் குணத்தை பற்றி பார்க்கும் போது இருவருமே அமைதியாக இருப்பதுடன் தங்களது வீரர்களிடம் விஸ்வாசமானவர்களாக இருந்தனர். மோர்கன் மிகச் சிறந்த கேப்டன், மிகச்சிறந்த வீரர். அவருக்கு முன்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நாங்கள் ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்தோம்
அவர் வீரர்களின் எண்ணங்களையும் வருங்காலத்தைப் பற்றிய கோணங்களையும் மாற்றினார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தற்போது அதிரடியாக விளையாடுவதற்கும் அவரே காரணம் என்று நான் நம்புகிறேன். நீங்கள் சரியான மனநிலையில் இருந்தால் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடலாம் என்பதை அவர் எங்களுக்கு கற்பித்தார். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து வருகிறோம்.
அவர் அபாரமான வேலையை செய்துள்ளார். இது அவமானம். அவரது தலைமையில் விளையாடாமல் இருப்பது விசித்திரமானது. அனைத்தும் முன் நோக்கி நகர்வதால் அதற்கேற்றார் போல் பழகிக் கொள்ள வேண்டும் என்பது வருத்தமாக இருக்கிறது. அதேசமயம் தன்னலமில்லாமல் அணியைப் பற்றி அவர் சிந்திப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.