பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!

Updated: Wed, May 22 2024 13:09 IST
Image Source: Google

ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இண்று முதல் தொடங்கியுள்ளன.  அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டின் செய்வதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் 3 ரன்களிலும், நிதீஷ் குமார் ரெட்டி 9 ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த ராகுல் திரிபாதி - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி அரைசதம் கடந்தர். அதன்பின் 33 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசென் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த ராகுல் திரிபாதியும் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் அப்துல் சமாத், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீர்ர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் இறுதிவரை போராடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய் கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் குர்பாஸ் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சுனில் நரைனும் ஒரு ரன்னிற்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதங்களை விளாசியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கும் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் தோல்வி குறித்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னதாக நாங்கள் எங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சில விஷயங்கள் சரியாக நடக்காத நாள்கள் உள்ளன. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் சரியாக செயல்படவில்லை. பந்துவீச்சிலும் எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. 

இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக நாங்கள் கூடுதல் பேட்டரைக் களமிறக்கினோம். மேலும் கேகேஆர் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நாங்கள் அனைவரும் இந்த சீசன் முழுவதும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். மேலும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தை நாங்கள் சென்னையில் விளையாடவுள்ளதால், இந்த தோல்வியை மறந்து நாங்கள் தயாராக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை