முத்தரப்பு டி20: தொடரிலிருந்து விலகிய பிலீப்ஸ்; நியூசிலாந்திற்கு பின்னடைவு!
Zimbabwe T20I Series: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸ் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இணைந்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் மூன்று லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியையும், இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்காக கிளென் பிலீப்ஸ் விளையாடி வந்த நிலையில், எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியின் போது காயத்தைச் சந்தித்தார். மேலும் அவரது காயம் குணமடைந்த சில காலம் தேவைப்படும் என்பதால் இத்தொடரில் இருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கூடுதல் வீரராக நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பாட்டிருந்த டிம் ராபின்சன் தற்போது முதன்மை அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஏற்கெனவே நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்சமயம் கிளென் பிலீப்ஸும் தொடரில் இருந்து விலகியுள்ளது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டெவான் கான்வே, ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் ஹெய் உள்ளிட்டோர் நியூசிலாந்து அணியுடன் பயனிப்பார்கள் என்பதையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கிளென் பிலீப்ஸ் குறித்து பேசினால், இதுவரை 83 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களுடன் 1929 ரன்களைச் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஆவரால் பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையாலும் அணிக்கு உதவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவான் கான்வேன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ்*, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி, மிட்செல் ஹே, ஜேம்ஸ் நீஷாம், டிம் ராபின்சன்.