NZ vs ENG: காயம் காரணமாக மற்றொரு நியூசிலாந்து வீரர் விலகல்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டி வெற்றியாளர் இன்றி முடிவடைந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 10) பர்மிங்ஹாமில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், போட்டி நாளான இன்றைய தினம் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங்கும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக டாம் பிளெண்டல் விக்கெட் கீப்பர் பணியை செய்வார்' என குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே வில்லியம்சன், சாண்ட்னர் இல்லாமல் நியூசிலாந்து அணி திணரும் நிலையில் தற்போது வாட்லிங்கும் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.