NZ vs IND, 3rd ODI: ஏமாற்றிய பேட்டர்கள், ஆறுதலளித்த வாஷிங்டன்; நியூசிக்கு 220 டார்கெட்!

Updated: Wed, Nov 30 2022 10:56 IST
NZ vs IND, 3rd ODI: New Zealand restricted India by 219 runs (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதேசமயம் இன்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல ஷிகர் தவான் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இந்த தொடரில் சிறப்பாக் செயல்பட்டு வந்த ஷுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 28 ரன்களோடு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 10, சூர்யகுமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து சொதப்பினர். 

மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 49 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் ரன்களைச் சேர்க்க, தீபக் சஹார் 2 சிக்சர்களை விளாசி 12 ரன்களிலும், யுஸ்வேந்திர சஹால் 8 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் 9 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர்.

ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து தனது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் அவரும் 51 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 47.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டெரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை