நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (மார்ச் 29) தொடங்கியது. அதன்படி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வில் யங், நிக் கெல்லி மற்றும் ஹென்றி நிக்கோலஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி 50 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டேரில் மிட்செலும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை எட்டியது.

அதன்பின் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 132 ரன்களை எடுத்திருந்த நிலையில் மார்க் சாப்மேனும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அறிமுக வீரான முகமது அப்பாஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 24 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இர்ஃபான் கான் 3 விக்கெட்டுகளையும், அகீஃப் ஜாவெத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News