NZ vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரான இன்று தொடங்கியது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இர்ஃபான் கான் ஒரு ரன்னிலும், ஷதாப் கான் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அந்த அணி 11 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் குஷ்தில் ஷா இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, 32 ரன்களை எடுத்திருந்த குஷ்தில் ஷாவு தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அப்துல் சமாத் 7 ரன்களுக்கும், ஜஹாந்தத் கான் 17 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியதுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிபபர் என எதிர்பார்க்கப்பட்ட டிம் செஃபெர்ட் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபின் ஆலன் 29 ரன்களையும், டிம் ராபின்சன் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.