NZ vs PAK, 4th T20I: நியூசிலாந்து பேட்டர்கள் அதிரடி; பாகிஸ்தானுக்கு 221 டார்கெட்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று (மார்ச் 23) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்காம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய டிம் செஃப்ர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், மற்றும் மிட்செல் ஹெய் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் மைக்கேல் பிரேச்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரில் மிட்செல் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.