NZ vs PAK, 5th T20I: டிம் செஃபெர்ட் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹசன் நவாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான முகமது ஹாரிஸும் 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஒமைர் யூசுஃபும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சல்மான் அலி ஆகா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களுக்கும், அப்துல் சமாத் 4 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த சலமான் ஆகா மற்றும் ஷதாப் கான் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தண்டியது.
பின்னர் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷதாப் கான் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் சல்மான் ஆகா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்மி நீஷம் 5 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபின் ஆலன் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து மார்க் சாப்மேனும் 3 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிம் செஃபெர்ட் 6 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிம் செஃபெர்ட் 3 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.