நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் முதலில் நடைபெற்றுமுடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹசீபுல்லா கான் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த பாபர் ஆசாம் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 33 ரன்களுக்கு ஃபகர் ஸமானும், 38 ரன்களுக்கு முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபகர் ஸமான், முகமது நவாஸ், இஃப்திகார் அஹ்மத் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ, மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் 22 ரன்களிலும், டிம் செய்ஃபெர்ட் 19 ரன்களிலும், வில் யங் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதனைத்தொடந்து விளையாடிய மார்க் சாப்மேன், கிளென் பிலீப்ஸ், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் சோபிக்க தவற நியூசிலாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் இஃப்திகார் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இத்தொடரில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதேசமயம் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.