NZ vs PAK: பாபர் ஆசம் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
இதையடுத்து இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலன் - கான்வே களமிறங்கினர். பின் ஆலன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். கான்வே 35 பந்துகளில் 36 ரன்களுடனும் வில்லியம்சன் 30 பந்துகளில் 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். பிலிப்ஸ் 18, நீசம் 5, பிரேஸ்வெல் 0, சோதி 2, மார்க் சேப்மேன் 32 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சர் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளையும் நவாஸ், முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் எப்போதும் சிறப்பாக விளையாடும் முகமது ரிஸ்வான் 4 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர். அடுத்து களமிறங்கிய ஷான் மசூதும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - சதாப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார்.
மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சதாப் கான் 34 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த முகமது நவாஸ் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். ஆனாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் ஆசாம் 79 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 18.2 ரன்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்களைச் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இத்தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.