NZ vs SA, 2nd Test: முதல் சதத்தைப் பதிவுசெய்த பெட்டிங்ஹாம்; நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று முந்தினம் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தனே டேன் பீட் 5 விக்கெட்டுகளையும், டேன் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 31 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணியில் ஃபோர்டுயின் 3 ரன்களிலும், டொண்டர் ஒரு ரன்னிலும், ஹம்ஸா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் நெய்ல் பிராண்ட் 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கீகன் பீட்டர்சன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 110 ரன்கள் எடுத்திருந்த பெட்டிங்ஹாமும் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 235 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 267 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்துள்ளது. இதில் டாம் லேதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதையடுத்து 227 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து தொடரவுள்ளது.