எல்பிடபிள்யூ முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சமீபத்தில் நடைபெற்ற 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. இந்த டெஸ்டில் 2ஆவது இன்னிங்ஸில் ஜடேஜா லெக் சைட் பக்கம் வீசிய பந்துகளை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.
இதுபற்றி தன்னுடைய யூடியூப் தளத்தில் பேசிய அஸ்வின், “ஜடேஜா வீசிய பந்தை பேர்ஸ்டோ காலில் வாங்கினார். ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். ஒரு பந்துவீச்சாளர், எப்படிப் பந்துவீசுகிறார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் ஒரு பேட்டருக்கு அந்தக் கவலையில்லை. அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்.
பவுன்சர் வீச பந்துவீச்சாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. பேட்டருக்கு எதுவும் இல்லை. ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டைப் பயன்படுத்தும்போது பந்து லெக் ஸ்டம்ப் பக்கம் வீசப்பட்டாலும் எல்பிடபிள்யூ கொடுக்கும்படி விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆஃப் ஸ்பின்னர் இடது கை பேட்டருக்குப் பந்துவீசும்போது வட்டத்துக்குள் 4 பேர் தான் இருப்பார்கள். பின்னால் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஷார்ட் பந்தைப் போடக்கூடாது என ஃபீல்டரை உள்ளே வைத்திருப்பார்கள். ஆனால் இடது கை பேட்டர் திரும்பி அடித்தால். அவர் அப்படி அடிக்கட்டும். ஆனால் எல்பிடபிள்யூ கொடுங்க சார்.
ஒரு பேட்டர் விளையாடும்போது இரண்டு பக்கமும் பந்துவீசப்பட்டாலும் எல்பிடபிள்யூ கொடுங்கள் என நான் சொல்லவில்லை. ஒரு பேட்டர் தன்னால் வலது, இடது என இரு பக்கமாகவும் விளையாட முடியும் என நிரூபிக்கும்போது, ரிவர்ஸ் ஸ்வீப் செய்யும்போது லெக் சைட் பக்கம் பந்து வீசப்பட்டாலும் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.