முடிவுக்கு வந்ததா ஆண்டர்சன் - பிராட் சகாப்தம்?

Updated: Wed, Feb 09 2022 20:29 IST
Image Source: Google

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 ஆண்டுகளாக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணியில் 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சனும், 2007ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர்.

15 ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் - பிராட் ஜோடி இங்கிலாந்து அணிக்காக அபாரமாக பந்துவீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். 

ஆண்டர்சன் 169 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 640 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

ஸ்டூவர்ட் பிராட் 152 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் - பிராட் இருவரும் இணைந்து 1177 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தின் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்தனர்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆண்டர்சன் - பிராட் ஜோடி சோபிக்கவில்லை. ஆண்டர்சன் ஆஷஸ் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 8 விக்கெட் மட்டுமே வீழ்த்த, பிராட் 13 விக்கெட் வீழ்த்தினார். ஆண்டர்சன் - பிராட் ஜோடி சோபிக்காதது, இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைய, இங்கிலாந்து அணி 0-4 என ஆஷஸ் தொடரை இழந்தது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததன் விளைவாக, இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்  அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பேட்டிங் பயிற்சியாளர் ராஜினாமா செய்தார். பால் காலிங்வுட் தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மேனேஜிங் டைரக்டராக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு முன்னாள் ஜாம்பவான்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் - பிராட் இடம்பெறவில்லை. ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 8 பேர், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து அணி ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் ஆண்டர்சன் - பிராட் ஆகிய 2 சீனியர்களை கடந்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 

ஆஷஸ் தொடரில் இடம்பெற்று ஆடியதில் ஓரங்கட்டப்பட்ட 8 வீரர்கள்:

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டோமினிக் பெஸ், சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஹசீப் ஹமீத்,  டேவிட் மலான். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை