விராட் கோலியின் சிறப்பான சதம் இது தான் - ரோஹித் சர்மா

Updated: Thu, Mar 03 2022 16:41 IST
Image Source: Google

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் மொஹலி மைதானத்தில் தொடங்குகிறது.

விராட் கோலி தனது 100ஆவது டெஸ்டை நாளை விளையாடவுள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் மற்றும் அவருடைய சிறந்த டெஸ்ட் சதம் பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018இல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் வென்றது மறக்க முடியாதது. விராட் கோலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என நான் நினைப்பது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜொஹன்னஸ்பர்க்கில் அவர் அடித்த சதம் தான். அந்த ஆடுகளம் மிகவும் சவாலானதாக இருந்தது. நிறைய பவுன்ஸ் இருந்தது.

தென் ஆப்பிரிக்காவில் பலரும் அப்போதுதான் முதல் முதலாக விளையாடுகிறோம். அங்குச் சென்று டேல் ஸ்டெயின், மார்னே மார்கல், பிளாண்டர், காலிஸ் என சிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் சதமடித்தார்.

அதன்பின் 2ஆவது இன்னிங்ஸில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனக்குத் தெரிந்து அதுதான் அவருடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். 2018இல் பெர்த்திலும் அற்புதமாக விளையாடி சதமடித்தார். ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் அவர் அடித்த சதம் தான் சிறந்தது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை